தாமிர, வெங்கல மற்றும் பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நல்லதா?

"ஏன்? வேண்டாம் என்கின்றீர்கள். உடம்புக்கு நல்லதுங்க" என்றார்.

"இது எங்களுக்குச் சரிப்பட்டு வராது. வேண்டவே வேண்டாம்" என்றேன்.

"காசு கொடுக்கத் தேவை இல்லை. இலவசமாகத்தான் தருகிறேன் கொண்டு போங்கள்" என்றார்.

"சின்னப் பிள்ளைகள் உள்ள வீடு எங்களுக்குத் தாமிர பாத்திரங்கள் சரிப்படு வராது " என்றேன்.

"சின்னப் பிள்ளைகளுக்கும் இது நல்லதில்லையா?" எனக் கேட்டார்.

"அப்படி அல்ல. இந்த பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, கரைத்த புளி, புளித்த தயிர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருள்களை வைத்தால் விசமாக மாறிவிடும். இதனைக் குடித்தால் வாந்தி பேதியாகும். ஏன்? உயிரிழப்புக்குக் கூட வாய்ப்புள்ளது" என்றேன்.

சற்று அதிர்ந்தார். "உண்மையாகவா?" என்றார் ஆச்சரியமாக.

"ஆமாங்க.. மயில் துத்தம் கொடூரமான நஞ்சு. மயில் துத்தம் என்பது தாமிரத்தால் ஆன ஒரு உப்பு. இது மயில் கழுத்து வண்ணத்தில் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் கடுமையான நஞ்சு.

மைதா மாவில் பசை தயாரிக்கும் வழக்கம் உண்டு. இந்தப் பசையில் மயில் துத்த உப்பைச் சேர்ப்பார்கள். அதனால் பசை கெடாமல் இருக்கும். அல்லது பசை தயாரித்த மறுநாளில் மோசமான துர்நாற்றம் வரும். காரணம் இந்த மயில் துத்தம் சேர்க்காத மைதாமாவில் நுண்கிருமிகள் செழித்து வளரும். அதனால் துர்நாற்றம் வரத்துவங்கும். இதனைச் சேர்த்துத் தயாரித்த பசையில் நுண்கிருமிகள் வளராது.

மயில் துக்கத்தின் இந்த விசத்தன்மைக்குக் காரணம் சுவையானது. இதனைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் சாப்பிடும் சோறு மாவுப் பொருளால் ஆனது. இந்த மாவு வாயில் ஊறும் உமிழ் நீரி, வயிற்றில் சுரக்கும் அமிலம் போன்றவற்றால் சிதைக்கப்படுகிறது. இதனால் நிறைய குளுக்கோஸ் உற்பத்தியாகிறது. இந்த குளுக்கோசை இன்சுலின் உதவியால் நம் செல்களுக்குள் செல்கிறது. பின்னர் சைட்டோபிளாசத்தில் இந்த குளுக்கோசில் நிறை மாற்றங்கள் ஏற்படுகிறது. இறுதியாக இது பைருவேட் (pyruvate) என்ற வேதிப் பொருட்களாக மாற்றப்படுகிறது. இவை சைட்டோபிளாசத்தில் இருந்து மைட்டோகாண்டிரியாவிற்குள் நுழைகிறது‌. அங்கு இந்த பைருவேட் NADH மற்றும் FADH2 என்ற ஆற்றல் மிகுந்த வேதிப் பொருள்களுடன் ATP என்ற நம் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தரவல்ல வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப் பட்ட NADH மற்றும் FADH2 மைட்டாகண்டிரியாவின் சுவாசத்திற்குப் பயன் படுகிறது. இந்த சுவாசத்தின் போது நிறைய ATP உற்பத்தி ஆகிறது. கூடவே கார்பன் டை ஆக்சைடும் தண்ணீரும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது குளுக்கோஸ் எரிக்கப்பட்டு இறுதியாக கார்பன் டை ஆக்சைடும் தண்ணீருமாக உருவெடுக்கிறது. அப்போது நமக்குத் தேவையான ஆற்றல் (ATP) நிறைய உற்பத்தி செய்கிறது. மயில் துத்தம் என்ற விசம் இதனைத் தடுக்கிறது. அதனால் ATP உற்பத்தி தடைப்படுகிறது. இதன் விளைவாக சில நிமிடங்களில் இறக்க நேரிடுகின்றது. சயனைடு சக்திவாய்ந்த விசம் என அறிவோம். இந்த சையனைடு போல மயில் துத்தமும் பயங்கரமான விசம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். மயில் துத்தம் போல சயனைடும் நமக்குத் தேவையான ஆற்றல் உற்பத்தியைத்தான் தடுத்து அதிவிரைவில் உயிரைப் பிரிக்கிறது. மயில் துத்தமும் அவ்வளவு சக்திவாய்ந்த விசத்தன்மையானது.

நீண்டநாள் புழங்காத பழைய வெங்கல மற்றும் பித்தளைப் பாத்திரத்தில் பச்சை வண்ணத்தில் இந்த மயில் துத்தத்தை ஒத்த கலவையைக் காணலாம். இந்த கலவை நச்சுத்தன்மை கொண்டது.

இதுமாதிரி இந்த தாமிர பாத்திரத்தில் எலுமிச்சைச் சாற்றை வைத்தால் மயில் துத்தம் மாதிரியான நஞ்சு தானாகவே உருவாகிறது. பின்னர் இதனைப் பருகுவது தற்கொலைக்குச் சமம்" என்றேன்.

"மேலும் தகவல் வேண்டும் என்றால் கூகுள் செய்து படித்துப் பாருங்கள்" என்றேன்.

"இந்த பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நல்லது" எனக் கோயிலில் சொன்னார்கள். "அதனால் அங்கிருந்து வாங்கி வந்தேன்" என்றார்.

என்னிடம் பேசிக் கொண்டே தன்னிடம் இருந்த இரண்டு தாமிர சொம்புகளையும் ஒரு துணியில் சுற்றி பரணில் ஏற்றிவிட்டார். காரணம் அவர்கள் வீட்டிலும் சிறுவர்கள் உள்ளனர் !

"வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து இந்த பாத்திரத்தைத் தண்ணீர் குடிக்க மட்டும் பயன்படுத்துங்கள்‌. எலுமிச்சைச் சாறு மற்றும் அமிலத் தன்மை உள்ள கரைசலை ஊற்றப் பயன் படுத்தாதீர்கள்" எனக் கூறிவிடலாம்.

அவர்களுக்கு இந்த உணவு வகைகள் எல்லாம் அமிலத் தன்மை கொண்டது எனத் தெரியவேண்டும். அத்தனையையும் கற்று அறிந்து ஞாயாபகத்தில் வைப்பது சவாலானது.

அப்படியே கற்றுக் கொண்டாலும் எத்தனை நாட்களுக்கு ஞாபகம் இருக்கும்? எளிதில் மறந்து விடுவிட வாய்ப்புள்ளது. அல்லது கவனக்குறைவாக அவசரத்தில் இந்த பாத்திரத்தை எலுமிச்சைச் சாறு வைக்கப் பயன்படுத்தி விடலாம். இதனை அறியாமல் யாராவது குடித்துவிட்டால், சிக்கல்தான். துன்பத்தை விலை கொடுத்து மட்டும் அல்ல இலவசமாகவும் வாங்கக் கூடாது.

கோயிலில் மெல்லிய குரலில், சிரித்த முகத்துடன், அருமையான உடல் அசைவுகளுடன்தான் பேசுவார்கள். இவை உங்களை ஈர்க்கும். "அவர்கள் அறியாமல் செய்கின்றனர். நீங்களும் உண்மை" என நம்பி விடுவீர்கள். அதன்படி இந்த பாத்திரத்தைப் பயன் படுத்தினால் குடும்பத்தில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

பித்தளை மற்றும் வெங்கலத்திலும் நிறையத் தாமிரம் உள்ளது. பித்தளை பாத்திரத்தை அப்படியே பயன்படுத்த முடியாது. இதனைச் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றால் ஈயம் பூச வேண்டும். ஈயம் (Tin) பூசிய பித்தளைப் பாத்திரங்களை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். ஈயமும் உடலுக்கு நல்லதல்ல. இது கல்லீரல் மற்றும் மூளையைப் பெரிதும் பாதிக்கும். இந்த காரணத்தால் இப்போது பித்தளைப் பாத்திரங்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைந்துவிட்டது. வளர்ந்த நாடுகளில் ஈயத்தை கைகளால் கூட தொடமாட்டார்கள். காரணம் ஈயத்தின் நச்சுத்தன்மையை அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள். நம் நாட்டில் இந்த புரிதல் இன்றும் இல்லை.

அடுத்து வெங்கலப் பாத்திரங்கள். இந்த பாத்திரத்தில் ஈயம் பூசுத் தேவையில்லை. அப்படியே சமையலுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இதனிலும் எலுமிச்சை சாற்றை ஊற்றிப் பரிமாறக் கூடாது. காரணம் வெங்கலத்தில் உள்ள தாமிரம் எலுமிச்சை சாற்றுடன் இணைந்து கடுமையான நஞ்சை உமிழும். இந்த நஞ்சு கலந்த உணவைச் சாப்பிட்டால் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்த காரணத்திற்காகத்தான் வெங்கல மற்றும் பித்தளை பாத்திரத்தின் இடத்தை எவர்சில்வர் பாத்திரங்கள் பிடித்துக் கொண்டன. எவர்சில்வரில் நாம் எந்த உணவுப் பொருட்களையும் பரிமாறலாம் மற்றும் சேமிக்கலாம் !

"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" என்ற திருக்குறள்தான் நினைவுக்கு வருகிறது.

"பாதுகாப்பான எவர்சில்வர் மற்றும் இரும்பு பாத்திரங்கள் இருக்க, நமக்கு ஏன் அபாயகரமான பித்தளை, வெங்கல மற்றும் தாமிர பாத்திரங்கள் வேண்டும்?" என்ற கேள்வி நியமானதே.

அதே நேரத்தில் தாமிர, வெங்கல மற்றும் பித்தளை பொருட்களைத் தொடுவதால் நமக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது. மேலும் இதன் பலன்கள் அதிகம். அதனால் வீட்டு, அலுவலகம் மற்றும் கோயில் கதவில் உள்ள கைப்பிடி மற்றும் சாவிகளை வெங்கலம் அல்லது பித்தளை செய்து பயன்படுத்தலாம்‌

காரணம் இந்த தாமிரம் நுண்கிருமிகள் வளர விடாது. மேலும் அதன் மேல் இருக்கும் நுண்கிருமிகளான பாக்டீரியா மற்றும் வைரசுகளை விரைவாக அழிந்துவிடும். அதனால் கைப் பிடிகள், பூட்டுகள் மற்றும் சாவிகளை வெங்கலம் அல்லது பித்தளையில் செய்தால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்குத் தொற்றும் நோய்களின் பரவல் கட்டுப்படும் என்பது உண்மை.

இன்று உலக அருங்காட்சியக நாள் அனுசரிக்கின்றனர். திருநெல்வேலி அறிவியல் மையத்தில் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அங்குப் பல கோடி வருடங்களுக்கு முந்தைய பொருட்கள் முதல் சில நூறு ஆண்டுகள் பழமையான பொருட்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு முனைவர் பா. ஆசைத்தம்பி, தொல்லியல் ஆய்வாளர் மற்றும் டாக்டர் வைத்தி ஆறுமுகசாமி, பேராசிரியர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் வந்திருந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் அடிப்படையில் நடந்த கலந்துரையாடல் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது.

Comments

Popular posts from this blog

இலைகளை கால்நடைகள் ஆர்வத்துடன் உண்ணும்போது. மற்றும் அதன் தண்டில் உள்ள தெளிவான நீரை குடிக்க முடியும்.

விமானத்தில் ஒரு ரெக்கை